There were 1,635 press releases posted in the last 24 hours and 395,586 in the last 365 days.

கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள் - விஸ்வநாதன் உருத்திரகுமரன்

கச்சதீவு பிரச்சனையில் முக்கிய பங்குதாரர்கள் ஈழத் தமிழர்கள் என்பதை இருநாட்டு தரப்பினரும் மறந்திருக்கிறார்கள் அல்லது மறைத்திருக்கிறார்கள்.

ஜப்பானில் Okinawa நகரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் டோக்கியோவுடன் மட்டும் பேசவில்லை Okinawa மக்களுடனும் பேசியது.”
— விஸ்வநாதன் உருத்திரகுமரன்.
NEW YORK, UNITED STATES, April 18, 2024 /EINPresswire.com/ -- இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில் இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்த பிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.

இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

கச்சதீவு உரிமை சார்ந்த பிரச்சனை அதிகம் முக்கியத்தும் பெறுகிறது. இந்தப் பிரச்சனையில் முக்கிய பங்குதாரர்கள் ஈழத் தமிழர்கள் என்பதை இருநாட்டு தரப்பினரும் மறந்திருக்கிறார்கள் அல்லது மறைத்திருக்கிறார்கள் என்ற கோணத்தில் இருந்து ஈழத் தமிழர்கள் சார்பாக நாம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 20 கிலோ மீற்றர்கள் தொலைவிலும் இந்தியாவின் இராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமிற்றர்கள் தொலைவிலும் கச்சதீவு அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து பாக்கு நீரணைக்கு நுழைகின்ற. நுழை வாயிலை கண்காணிக்கக்கூடிய கேந்திர ஸ்தானத்தில் கச்சதீவு இருப்பதனால் அது கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவுக்கு பெரிதும் துணைநிற்க வல்லது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்ட போது இரண்டு நிலப்பரப்புக்கும் இடைப்பட்ட கடல்கள் சமமாக பங்கிடப்பட்டன. அந்த அடிப்படையில் கச்சதீவு இந்திய நிலப்பரப்புக்குள் இருந்தது. ஆனாலும் அரசியலில் ஏற்படுகின்ற விட்டுக்கொடுப்புகளும், நிர்ப்பந்தங்களும், நலன்களும், ராஜதந்திர வியூகங்களும் அவ்வப்போது நிலங்களையும், கடல் எல்லைகளையும், நிர்வாக எல்லைகளையும் மாற்றி அமைக்கும் என்பதற்கு கச்சதீவு சிறந்த உதாரணம்.

எதிரணியினரால் சூழப்பட்டிருந்த இந்தியா, இலங்கையை தன் பக்கம் இழுப்பதற்கான ஒரு முயற்சியாகவே தன்னுடைய நிர்வாகத்தின் கீழுள்ள கச்சதீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கி இலங்கையுடனான உறவை பலப்படுத்துவதற்காகவே அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவிற்கும் இடையில் 1974 யூன் 06ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மீண்டுமொரு ஒப்பந்தம் 1976ஆம் ஆண்டு கச்சதீவு தொடர்பாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டது.

1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் கச்சதீவின் நிர்வாகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஈழத் தமிழரின் மரபுவழித் தாயகத்தை அண்டிய கடலின் எல்லைக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவது, நிர்வகிப்பது தொடர்பான அனைத்து விடயங்களிலும் ஈழத் தமிழர்கள் முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும். இந்திய தரப்பால் முன்வைக்கப்படுகின்ற வரலாற்று ரீதியான ஆதாரங்களின் அளவுக்கு ஈழத் தமிழர்களால் எவ்வித ஆதாரங்களும் முன் வைக்கப்படவில்லை. ஈழத் தமிழர்கள் இந்த பிரச்சனை சார்ந்து எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பது மிக ஆபத்தானது.

1974ஆம் ஆண்டு ஒப்பந்தம், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தம், 1987 இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தம் யாவற்றிலும் ஈழத்தமிழர்கள் ஒருதரப்பாக அல்லாமல், பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றார்கள். நாம் எமது அரசியல் இறைமையை வெளிப்படுத்த வேண்டும்.

** ஜப்பானில் Okinawa நகரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் டோக்கியோவுடன் மட்டும் பேசவில்லை Okinawa மக்களுடனும் பேசியது.

அண்மைக் காலமாக கச்சதீவு பிரச்சனை பற்றி தமிழகத்திலும், இலங்கையிலும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளும், கருத்துருவாக்கங்களும் ஈழத் தமிழர்களை புறந்தள்ளி இதனை இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான எல்லை பிரச்சனையாக காட்டுவதாகவே அமைவதைக் காணலாம்.

இந்த விடயத்தில் பேசப்பட வேண்டிய முக்கிய தரப்பு ஈழத் தமிழர் ஆவார். பாக்கு நீரிணை கடற் பரப்பில் கடல் வளங்களை பயன்படுத்துவதற்கும் அனுபவிப்பதற்கு இரண்டு கடற்கரைகளிலும் வாழ்கின்ற தமிழ் மீனவ சமூகங்களுக்கே உரிமை உண்டு. இவ் இரு சமூகங்களும் தொல்தமிழ் குடி வழிவந்து இரண்டு கடற்கரையிலும் பரந்து வாழ்கின்ற தமிழ் சமூகமாகும். இத் தொல் தமிழ்குடி இரண்டு அரசுகளுக்குள் வாழ்ந்தாலும் அவர்கள் மொழியியல் பண்பாட்டு ரீதியில் ஒரே குழுமத்தினரே எனவே அந்த அடிப்படையும் கருத்திற் கொண்டு கச்சதீவு பிரச்சனை அணுகப்படவும், தீர்க்கப்படவும் வேண்டும்.

கச்சதீவுடன் தொடர்புடைய பிரச்சனையில் சிங்கள பௌத்த அரசு மீதான எதிர்ப்புணர்வை கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய சக்திகள் இந்திய தரப்பினரின் நிலைப்பாட்டை ஆதரிப்பதை அல்லது கண்டும் காணாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது ஈழத் தமிழர் தரப்பின் தோல்வி மனப்பான்மையிலிருந்து எழுகின்ற இயலாதன்மையின் வெளிப்பாடு.

இலங்கையை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு இந்தியத் தரப்பு ஈழத் தமிழரின் அடிமடியில் கை வைக்க அனுமதிக்க முடியாது. இங்கு புத்தி பூர்வமாக ஈழத் தமிழர்கள் செயற்பட வேண்டும்

இந்திய தேர்தல் பிரச்சார உத்திகள் இலங்கை – இந்திய சர்ச்சையாக முரண்பாடாக எழுகிறதோ இல்லையோ, எதிர்காலத்தில் தமிழகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் மோதுகிற ஒரு நிலையை நோக்கியே இழுத்து, வளர்த்துச் செல்லப்படுவதாகவே அமைகிறது. ஈழத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களையும் இந்தியாவையும் எதிர்க்கின்ற முரண்பாடுகளை ஏற்படுத்துகின்ற இத்தகைய செயல்களுக்கு இலங்கை அரசு பூரண அனுசரணை வழங்கி வருகிறது. அதற்கேற்றாற்போல் சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற தமிழ் அரசியல் தரப்பை இணைத்து இந்திய எதிர்ப்பு வாதங்களை ஈழத் தமிழர்கள் என்ற போர்வையில் நடத்தியும் வருகிறது. இத்தகைய செயல்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் . தாய் தமிழகத்தின் உறவுகளுடன் தமிழர்களைப் பகையாளிகளிக. ஆக்க இலங்கையரசு மேற்கொள்கின்ற அனைத்து சதுரங்க நடவடிக்கைகளையும் தமிழ் தேசிய இனம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய ஒரு சூழலில் கச்சதீவு விவகாரம் இலங்கை அரசுடன் மாத்திரமல்ல அது ஈழத் தமிழர்களின் அரசியல் பொருளியல் நலத்துடனும் சம்பந்தப்பட்டது என்ற அடிப்படையில் ஈழத் தமிழர்கள் கச்சதீவு விவகாரத்தில் தலையிடவும், பேசவும் வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

பாக்கு நீரிணையும், கச்சதீவு கடற்பரப்பும் வரலாற்று ரீதியாக இருநாட்டு தமிழ் மக்களுடைய தொழில் புரியும் பாரம்பரிய கடற்பரப்பு. எனவே இந்த கடற் பரப்பு சார்ந்து எடுக்கப்படுகின்ற அரசியல் முடிவுகள் இருநாட்டு மீனவ சமூகங்களின் அனுமதியின்றி அல்லது அந்த மக்களுடைய ஆதரவின்றி எடுக்கப்படுமாயின் அது தொடர் பதற்றத்தையும் குழப்பங்களையும் விளைவிக்கும். எடுக்கப்படுகின்ற அரசியல் முடிவுகள் மக்களுக்கானதாக அமைய வேண்டும் . இரு தரப்பும் நலன்களை அனுபவிக்க கூடிய வகையிலும் இருதரப்பும் திருப்தி அடைய கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் தமிழக மீனவ சங்கமும் வடகிழக்கு மீனவ சங்கமும் ஒரு மேசையில் அமர்ந்து பேசுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் பட்சத்தில் இந்த பிரச்சனை அரசுகளின் தலையிடு இன்றி இலகுவாக தீர்த்துவைக்கப்பட முடியும்.

தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
Instagram